×

2வது முறையாக ஒசாகா சாம்பியன்: பைனலில் பிராடியை வீழ்த்தினார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியுடன் (25 வயது, 24வது ரேங்க்) நேற்று மோதிய ஒசாகா (23 வயது, 3வது ரேங்க்) 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே 2019ல் ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த ஒசாகா, தற்போது 2வது முறையாக இங்கு பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இது அவரது 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். யுஎஸ் ஓபனில் 2018 மற்றும் 2020ல் ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். பிப். 2020க்கு பிறகு தோல்வியை சந்திக்காமல் இருந்து வரும் அவர், பிராடிக்கு எதிராக 21வது வெற்றியை பதிவு செய்தார். மேலும், கிராண்ட் ஸ்லாம் தொடர்களின் பைனலில் தோற்றதில்லை என்ற சாதனையையும் ஒசாகா தக்கவைத்துக் கொண்டார்.

* ஜோகோவிச் - மெட்வதேவ் பலப்பரீட்சை
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா), ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் மோதுகிறார். ஆஸி. ஓபனில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் (33 வயது), இங்கு 9வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறார். அதே சமயம், தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல மெட்வதேவும் வரிந்துகட்டுவதால் இன்றைய பைனலில் அனல் பறப்பது உறுதி.

Tags : Osaka ,Brady , 2nd Osaka Champion: Defeated Brady in the final
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி